வரும் முன் காப்போம்.
மழைக்காலம் வந்துவிட்டால் குடிசைகளில் வசிப்போர் சாதாரண மழை அடைமழை, கனமழை ஆகிவிட்டால் தற்காப்பு நடிவடிக்கை எடுத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாதே எனும் அச்ச மேலீட்டால் உண்டும் உண்ணாதவர்களாக, உறங்கியும் உறங்காதவர்களாக இரவுப் பொழுதை கழிப்பார்கள்.
அழுத்தமான கட்டிடத்தில் வசிப்போர் அது என்ன மழையாக மாறினாலும் அதைப்பற்றின அச்சம் அறவே இல்லாமல் உண்பார்கள், உறங்குவார்கள். ஆனால் சாதாரண மழையே குடிசை வாசிகள், பங்களா வாசிகள் என்ற பாகுபாடில்லாமல் சில அகால மரணங்களையும், சில நோய்களைக் கொடுத்து ஏராளமான உயிர்களைக் காவு கொண்டு விடும்.
அதனால் மழைக்காலத்தில் ஏற்படும் அகால மரணத்திலிருந்தும், நோய்களிலிருந்தும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் நடிவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சில ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மழைக் காலத்தில் வீசக் கூடிய வேகமானக் காற்று சில மின்சாரக் கம்பங்களை அடியோடு சாய்த்து விடுவதுண்டு அவ்வாறு சாய்த்து விட்டால் மக்கள் அதனருகேப் போக மாட்டார்கள். ஆனால் அதேக் காற்று சில இடங்களில் கம்பிகளை மட்டும் அறுத்து விடும். அவ்வாறு கம்பிகள் மட்டும் அறுபட்டால் அது மண்ணிற்குள் சொறுகிக் கொள்ளும் அது மக்களுடையப் பார்வைக்கு எட்டாமல் அதன் மீது கால் வைத்ததும் மின்சாரம் உடலில் பாய்ந்து அகால மரணத்தை எற்படுத்தி விடுகிறது.
சென்னை வேளச்சேரியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பால்வியாபாரியின் சைக்கிள் அறுந்துக் கிடந்த மின்சார வயரில் ஏறியதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் இறந்து விட்டார்.
அதனால் மழைக் காலத்தில் வெளியில் நடக்கும் பொழுது மின்சாரக் கம்பங்களின் அருகில் நடக்கக் கூடாது அருகில் நடக்கும் நிலை ஏற்பட்டால் கம்பிகள் அறுந்து தொங்குகிறதா ? என்றுத் தலையை உயர்த்திப் பார்க்க வேண்டும்.
கண்மாய்கள், ஏரிகளின் ஓரங்களில் நடக்கக் கூடாது காரணம் அதில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரின் வேகத்திற்கொப்ப அதன் ஓரங்களில் மண் சரிந்து கொண்டிருக்கும் அல்லது நாம் நடக்கும் பொழுது சரியத் தொடங்கலாம்.
சமீபத்தில் சேலம் தலைவாசல் பகுதியில் வசிஷ்ட நதியின் அருகே டியூசனுக்காக நடந்து சென்றுக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் சறுக்கி விழுந்ததனால் நால்வரும் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர் நதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கருவேல மரத்தை நால்வரும் பிடித்துக் கொண்டு அபயக் குரலெழுப்பியதால் அவ்வழியே சென்று கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க சிவபாக்கியம் என்றப் பெண் துணிச்சலுடன் தனது சேலையை உருவி ஒரு நுணியைப் பிடித்துக் கொண்டு அவர்கள் மீது வீசியதும் அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக கரை ஏறி தப்பித்துள்ளனர். அப்பெண்ணின் இந்த வீர, தீரச் செயலை மொத்த ஊர் மக்களும் கூடிப் பாராட்டி உள்ளனர். அதனால் மழைக் காலத்தில் கண்மாய்கள், ஏரிகளின் ஓரங்களில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் பலர் சர்வ சாதாரணமாக வெளியில் ஒன்றுக் கூடி நெருப்பை மூட்டிக்குளிர் காய்வதுண்டு சிலர் வீடுகளுக்குள்ளேயே நெருப்பை மூட்டிக் குளிர் காய்வார்கள். இது சில சமயத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு. சமீபத்தில் கொடைக்கானல் மல்லிரோட்டில் வசிக்கும் சேவியர் என்பவரின் மனைவி இரவு நேரத்தில் தனது வீட்டிற்குள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து விட்டு கதவுகள், ஜன்னல்களை மூடி விட்டு உறங்கி விட்டார் வீட்டிற்குள் அதிகமான புகை மூட்டம் சூழ்ந்திருந்தக் காரணத்தால் அவரும், அவருடைய இருப் பிள்ளைகளும் மூச்சுத் திணறி இறந்து விட்டனர். நெருப்பின் மூலமாக குளிர் காயும் பழக்கத்தை வெளியிலும், வீட்டிற்குள்ளும் அறவேத் தவிர்த்து விடுங்கள்.
மலேரியா, டெங்கு, காலரா, சிக்குன்குன்யா, எலிகாய்ச்சல், டைபாய்டு, ஹெபாடிடிஸ், ஆஸ்துமா, விஷகாய்ச்சல் போன்றவை உருவாவதற்கு தேங்கிக் கிடக்கும் கழிவு நீரில் அமர்ந்து விட்டு வந்து கடிக்கும் கொசுக்களினால் தான் பரவுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் நோய்கள் வராமல் தடுப்பதற்காக கொசுவை ஒழிக்கும் பணியில் 7500 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பல்மருத்தவமனையின் என்.சி.சி தொடக்க விழாவில் தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அது பட்டித் தொட்டிகளை வந்தடைவதற்குள் வெயில் காலம் தொடங்கி விடும் அதனால் ஒவ்வொருவரும் தங்களின் வீட்டை பாதுகாத்துக் கொள்ள கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். கொசுவத்திகளை விட, கொசு வலைகள் பாதுகாப்பானதாகும்.
ஹெபபடிஸ் ''ஏ'' எனும் நோயும் கொசுக்களால் பரவக்கூடியது இந்நோய் ஒருவருக்கு தாக்கினால் கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி எற்படும் இவ்வாறு ஏற்பட்டால் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையில் இதற்காக தடுப்பூசி இருக்;கிறது இரத்தப் பரிசோதனை செய்துகொண்டு இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் திருத்தனிகாசலம் கூறுகிறார்.
மூன்றையும் மொத்தமாக சொல்லி மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. இதனால் இரண்டு, மூன்று நாட்கள் வலி நீங்கியது போல் தெரிந்தாலும் அந்த இரண்டு, மூன்று நாட்களில் உள்ளுக்குள் நோய் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும். பெரும்பாலான நோய்கள் வளருவதற்கு மெடிக்கலில் தோராயமாக சொல்லி வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பழக்கத்தை மழைக்காலத்திலும், மழை அல்லாத காலத்திலும் தவிர்க்க வேண்டும்.
எலிகாய்ச்சல் ''லெப்டோஸ்பைரோசிஸ்'' என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது இந்த பாக்டீரியா எலியின் சிறுநீரிலிந்தே உருவாகிறது தேங்கி நிற்கும் தண்ணீரில் கால் வைக்கும் பொழுது காலின் பித்த வெடிப்புகள், அல்லது சிறிய சிராய்ப்புகள் வழியே உடலுக்குள் ஊடுறுவத் தொங்டகுகிறது இன்னும் இந்த பாக்டீரியாக்கள் சிலருடைய வீடுகளில் வளரும் செல்லப்பிராணிகளாகிய நாய், பூனையின் சிறுநீரிலிருந்தும் பரவுகின்றன. மழைக்காலத்தில் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் நேராக வீட்டிற்குள் செல்லாமல் குழாயடிக்கு சென்று கால்களை நன்றாக சோப்பிட்டுத் தேய்த்து கழுவியப் பிறகு வீட்டுக்குள் நுழைய வேண்டும்.
மழைக்காலத்தில் அதிகம் வாந்தி, பேதி ஏற்பட்டால் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது உப்பையும், சர்க்கரையும் சேர்த்து தொடர்ந்துப் பருக வேண்டும் இதுதான் வாந்தி பேதி மூலமாக உடலில் இழந்த நீர் சத்தை பெற்றுத் தரும். இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு நோயாளிகள் உப்பும், சர்க்கரை சேர்க்காமல் பருகலாம். நீரை 100 செல்ஸியஸ் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைக்க வேண்டும் ஏராளமானக் கிருமிகள் முற்றாக அழிவதற்கு ஐந்து நிமிடங்கள் கொதிப்பது அவசியம்.
மழைகாலத்தில் கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் அலுவலகத்திலும், வீட்டிற்குள்ளுமாக முடங்கிக் கிடப்போம் நடை அதிகம் இல்லாததால் உடல் அசைவுகள் குறைந்திருக்கும் அதனால் நுண்ணிய நரம்புகள் வழியாக ஹார்ட்டுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகள் கொழுப்பால் சூழப்பட்டால் மாரடைப்புக்கு வழிகோலும் என்றும் டாக்டர் எச்சரிக்கிறார்.
வாரம் ஒரு பிரியாணி, வாரம் ஒரு மட்டன் கறி என்ற வழக்;கத்தை குறைந்த பட்சம் மழைக் காலத்தில் மட்டுமாவது தவிர்த்துக் கொண்டு காய்கறிகளை வேகவைத்து சாப்பிட வேண்டும்.
வீட்டையும், வீட்டின் சுற்றுப் புறச் சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தெரு ஓரங்களில் ஏற்கனவே தேங்கிக் கிடக்கும் கழிவு நீர்களாக இருந்தாலும், அல்லது அப்பொழுது தான் பெய்த மழைநீராக இருந்தாலும் அதை சாக்கடைக்குள் தள்ளி விட வேண்டும். இல்லை என்றால் அதில் எலி, நாய், பூனையின் சிறுநீர் கலந்து விட நேரமாகாது இது காலில் படும் பொழுதும், அதில் கொசுக்கள் அமர்ந்து விட்டு நம்மைக் கடிக்கும் பொழுதும் மேற்காணும் நோய்கள் தாக்கப்படுகிறது நம்வீட்டு வாசலில் தேங்கிக் கிடக்கவில்லை என்று அலச்சியப்படுத்தாமல் அடுத்த வீட்டு வாசலில் தேங்கிக் கிடந்தாலும் அதை அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இஸ்லாம் சுத்தத்தைப் பேணச் சொல்கிறது, சுத்தம் தான் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது சுத்தம் இறைநம்பிக்கையில் ஒருப்பகுதி என்றும் இஸ்லாம் கூறுகிறது.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்